வனவியல் தொழில்நுட்பங்கள்

தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் 

மெலியா டூபியா (Melia dubia)
காணப்படும் இடங்கள்
களிமண், செம்மண் மற்றும் குருமண் ஆகியவற்றிலும் 800 மிமீ வருடாந்திர மழையிலும் இந்த மரங்கள் நன்கு வளரும்.
விதை சேகரிப்பு,  பதனிடுதல் மற்றும் நாற்றங்கால் நுட்பங்கள்
விதை பதனிடுதல் மற்றும் முன்நேர்த்தி:
மிதக்கும் விதைகளை நீக்குவதற்கு முதலாவதாக விதைகளை நீரில் முக்க வேண்டும்.
நாற்றுப்பண்ணை: மார்ச்-ஏப்ரல் மாதங்களில் விதைகளை விதைப்பது நல்லது. சுத்தப்படுத்தப்பட்ட உலர்ந்த விதைகளை திறந்த மேட்டுப்பாத்தியில் 5 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். மணலில் விதைகள் முளைக்காது. மண் மற்றும் தொழு உரத்தை 1:1 விகிதத்தில் உள்ள ஊடகத்தில் விதைகளை விதைக்க வேண்டும். ஒரு நாளிற்கு இரண்டு முறை, விதைத்த விதைகளுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். நிழலில் இருக்கும் நாற்றுப்பண்ணையை தார்பாலித்தீன் விரிப்புக்களைக் கொண்டு மூடுவதால், ஊடகத்தில்  வெப்பநிலையை பராமரிக்க முடியும். 90 நாட்களில் விதைகள் முளைத்து விடும்.
விதையில்லாப் பெருக்கம்: இளம் தண்டு துண்டுகள் மற்றும் இளந்தளிர்கள், 1000-2000 ஐ.பி.ஏ. திரவக்கலவையில்  நன்கு வளரும். வயதான மரங்களிலிருந்து வெட்டப் படும் இளந்தளிர்கள் மிக வேகமாக வேர்விடும்.   விதையில்லாப் பெருக்கத்திற்கு, பென்சில் அளவு  தண்டு துண்டுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனை மணல் ஊடகத்தில் நட்டு ஒரு நாளிற்கு இரண்டு முறை நீர் பாய்ச்ச வேண்டும். வடிகாலிர்க்காக தனி ஏற்பாடு அவசியம் செய்ய வேண்டும். வறண்ட பருவங்கள் வேர் விடுவதற்கு உகந்த பருவமாகும். 75 நாட்களில் நாற்றுகள் வேர்விடும்.
குறிப்பு:  மெலியா டூபியா நாற்றுகளை மிகப் பக்குவமாக கையாள வேண்டும். முக்கியமாக நாற்றுகளை பறிக்கும் பொழுதும் மற்றும் வேர்விட்ட தளிர்களை பைகளுக்கு இடமாற்றம் செய்யும் பொழுதும் மிக கவனமாக இருக்க வேண்டும்.
தோட்ட மேலாண்மை:
5*5 மீட்டர் இடைவெளியில் நடுவது நல்லது.  உரங்களை பயன்படுத்துவதன் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும். முறையான பாசனம் செய்வதன்மூலம் மரங்களின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். முதல் மூன்று வருடங்களுக்கு, முறையாக நீர்ப்பாசனம் செய்தல் மற்றும் உரங்கள் அளிப்பதன் மூலம் ஆரம்பத்தில் வளர்ச்சியை அதிகரிக்கலாம். இந்த மரங்கள், நிலப்பகுதியிலிருந்து 8-10 மீ உயரத்தில் கிளைகளிடும். மானாவாரி நிலைகளில். இதன் வளர்ச்சி குறைவாகத்தான் காணப்படுகிறது.     
வேளாண்காடுவளர்ப்பு நடைமுறைகள்
வேளாண்காடுவளர்ப்புக்கு ஏற்ற ஒரு மரமாக மெலியா டூபியா விளங்குகிறது. நிலக்கடலை, மிளகாய், மஞ்சள், உளுந்து, பப்பாளி, வாழை, முலாம்பழம், கரும்பு ஆகியவற்றை ஊடுபயிர்களாக வளர்த்துக் கொள்ளலாம். வரப்புகளில் மெலியா டூபியா கன்றுகளை வளர்க்கும் பொழுது நான்கு வருடங்களுக்குள் விளைச்சலளிக்கும் பருவத்தை அடைந்து விடும்.
மகசூல்
5 வருடங்களிலிருந்து ஒரு கன அடிக்கு ரூ.350 கிடைக்கும். வளர்ச்சி விகிதம் ஒரு வருடத்திற்கு 20 – 25 செ.மீ வரை இருக்கும். தற்பொழுது, ஒரு டன்னிற்கு ரூ.7300 ஈட்டுகிறது.
பயன்கள்
பலகை தொழிற்சாலைகளுக்கு உகந்த மரமாக மெலியா டூபியா திகழ்கிறது. பெட்டியிலிடுவதற்கு, கரையான்களுக்கு இயற்கையாகவே இந்த மரம் எதிரியாக இருப்பதனால் கூரை பலகைகளுக்கு, கட்டிடம் கட்டுவதற்கு, வேளாண்மைக் கருவிகள் செய்வதற்கு, பென்சில், தீப்பெட்டி, இசைக்கருவிகள் செய்வதற்கு பயன்படுகிறது. மரப்பலகைத் தொழிற்சாலைகளில் இந்த மரத்திற்கு அதிக வரவேர்பு இருக்கிறது.   

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016